Skip to main content

Posts

கருணை

முகிலாய் நின்றனை  குழலென மேல்விரித்த குடை மட்டுமல்ல உன் உவமை   அழல் கொண்ட நெஞ்சங்கள் நெகிழ் நின்ற ஜென்மங்கள் அலைபாயும் மானிடத்தின் அவலநிலைக் கிறுதியென்று உனக்குள்ளே பூத்திருக்கும் சின்னஞ்சிறு நீர்த்துளிகள் ஒவ்வொன்றும் ஒரு கனவு கனல் கெட்டு வெறும் கரிபூசி நிற்பினும் உள்ளுக்குள் உயிர்த்திருக்கும் மின்பூச்சிகள் ஒவ்வொன்றுமொரு நம்பிக்கையென அதைச் சுமந்தொரு   முகிலாய் நீ நின்றனை பின்னொரு மழையாய் பெய்தனை அகலிடம்* அதன்மேலே படிந்துள்ள துயரெலாம் பொடியாக்கி  கலைத்தனை உனக்குள்ளே கரைத்தனை அதெயெல்லாம் சுமந்தொரு விசையினில் பாய்ந்தனை சிறு ஓடைகளெனச்சுமந்து பெருநதியாயிப் புவிவிரிந்து பின் துயரடங்கா கரும்கடலென கலந்தனை துயர் துடைத்து நீ துலக்கிய மனவெளியில் ஒரு கோடி புன்னகைகள் பூத்தெங்கும் ஒளிபரப்ப நிறை நெகிழ்வில் நனவுலகில் கதிர் பரவும் விதை பிளந்து பூ பூத்து காய்பழுத்து கனியாகி பின் விதையாகி புத்துயிர்ப்பிறக்கும்  நம்பிக்கைநீட்டியவர்க்கு பொய்க்காத வரம்கொடுக்க மறுபடியும் நீ முகிலாகி நின்றனை *அகலிடம் : பூமி  pic courtesy
Recent posts

ஒருமை

நான் என்பதறியாமை நீ என்பதியலாமை நாமென்பதே புவிஇயக்கம் உறவின்றி அசையாது அணுவதுவும்  pic courtesy

வைராகியின் பாட்டு

வைராகியின் பாட்டு தனிமையில் ஓர் பயணம் தீர்ந்தது தாகம் முடிந்தது மோகம் பிறந்தது ஞானம்                 போவதற்க்கில்லை ஓரிடமும் தேடுதற்க்கில்லை ஓர்சுகமும் களைமிகு கால்களில் வலிமையில்லை நிறமில்லை கண்களில் வெளிச்சமில்லை வெறுமைகள் நிறைமனம் நினைப்பதில்லை வெறுங்குழல் உடலதில் வெறுமென அலைந்திடும் சிறுகாற்றலைகள், ஊதியில்லை அதில் நாதியில்லை         சேர்ப்பதற்கில்லை ஒரு கனவும் சேருதற்கில்லை ஓருறவும் பட்டுப்போன நெஞ்சில் ஈரமில்லை களைகெட்ட உடலினில் உணர்வுமில்லை செவிகெட்ட பின்னால் சுருதியில்லை பசியில்லை அதனால் பஞ்சமில்லை ஐம்புலன் ஆட்டிடும்  உடலதனாட்சியை ஒரு கிருமிகூட தீர்த்துவிடும் சூனியம் துவக்கும் சூனியம்  முடிக்கும் இடைப்பட்ட நேரந்தான் வாழ்வு இடைவந்த  தோற்றம்  வெறுங்கானல்   pic courtesy

காற்றும் குழலும்

கருங்குழல் பட்டினை கரம் கொண்டு தொட்டொரு   தந்தியாய் மாற்றிடும் காற்று   விளைகின்ற இசையினில் குரலிலை மொழியிலை விரிந்ததோர் ஆகாய மௌனம்   image courtesy

ஞானக்கூற்று

கரு பூக்கும் முன் நான் இல்லை கல்லறையில் கரைந்த பின்னும் நான் இல்லை இடை வந்த பொழுதில் , உள் இழுத்துவிடும் காற்றின் விசையில் வடிவமாய் அலைந்து , முடிவினில் நீள் படுத்த பிணமாய் மாறிவிடின் நான் என்பது நிஜமா காற்றென்பதோ நிஜம் காற்று புகுந்து விளையாடி ஓய்ந்து விட்டு சென்ற பொருளோ என் சடலம் என்னுள் மலர்ந்து பின் எனக்குள்ளே மடிந்து போன கனவோ நான் கண்ட என் வாழ்க்கை கனவுக்கும் மெய் கண்ட நனவுக்கும் இடைதூரம் அறிவதுதான் ஞானமொ . image courtesy

முகப்பு

அத்திமர நிழலோரம் வார்த்தைகளைக் கோர்த்திருப்பேன் வழிப்பிள்ளையார் அருகமர்ந்து சரம் கோர்க்கும் பித்தனைப்போல்   சில பூக்கள் கமகமக்கும் மருந்தளவு எருக்கம்பூ அதிலிருக்கும் அவசரக் கைபறித்த தண்டோடு முள்ளிருக்கும்   சிலபூக்கள் கணநேரத்தில் சருகாகும் சில பூக்கள் ஒரு வேளை அழியா வரம் சுமக்கும்   வழிநடந்த வலிசுமந்துவரும் காலில் தனைசுமந்து - இம் மரநிழல் தேடிவரும் அன்பார்ந்த நல்மனமே ஒருபொழுது அருகமர்ந்து சரக்கோர்வை தனைக்காண்க   உள்ளம் நனைக்க ஒரு கைய்யளவு தண்ணீர் பருகுக